Aug 31, 2010

மருத்துவமனைக்கு மறுமலர்ச்சி!

"நான் நோயுற்றால், அதைக் குணப்படுத்துபவன் அல்லாஹ்தான்" (26:80) என்பது, இஸ்லாத்தின் அருள்மறையாம் குர்ஆன்,                     மனிதனை இறை வல்லமை மீது நம்பிக்கை கொள்ளச் செய்து அறிவுறுத்தும் அருள் வாக்காகும்.

"ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு. சரியான மருந்தால் சிகிச்சை செய்யும்போது, அல்லாஹ் நாடினால், அந்த நோய் குணமாகும்" (சஹீஹ் முஸ்லிம்) என்பது நபிமொழியாகும். இதுவும் இஸ்லாத்தின் இனிய போதனைதான்.



கி.பி.1983 இல் பொதுநல நோக்குடன் தொடங்கப்பெற்றது நமதூரின் 'ஷிஃபா' மருத்துவமனை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசு மருத்துவமனையில் இல்லாத வசதிகளுடன் உருவாயிற்று இந்த 'ஷிஃபா' மருத்துவமனை என்பதும் நாமறிந்ததே. சிறந்த மகப்பேறு பெண் மருத்துவர்கள் இங்கு முழு நேரச் சேவையில் ஈடுபட்டிருந்ததால், சுகப் பிரசவங்கள் பல நிகழ்ந்துள்ளன. (இக்கட்டுரையாளரின் மூன்று பிள்ளைகள் இம்மருத்துவ மனையில்தான் பிறந்துள்ளனர்.) பல அவசர சிகிச்சைகளும் பெற்றுச் சுகமடைந்தவர்களும் நம்மூரில் ஏராளம். சிறப்பு மருத்துவர்கள் பலர் இங்கு வருகை தந்து சிகிச்சைகளும் தந்துள்ளனர். இவ்வாறு, அரசு சாராத பொது மருத்துவமனையாகவும், சேவை மனப்பான்மையிலும் இயங்கிவந்த 'ஷிஃபா'வுக்குச் சில ஆண்டுகளாகப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்ற கசப்பான உண்மையை உணரத்தான் வேண்டும்.

அதற்கான காரணங்கள் யாவை என்று ஆராய்வது, இக்கட்டுரையின் நோக்கமன்று. 'நடந்தது நடந்ததாக இருக்கட்டும்; இனி நடக்க வேண்டியது நல்லதாக இருக்கட்டும்' என்ற எண்ணத்தில், நமதூரின் நலனில் அக்கறை கொண்ட சிலர் இம்மருத்துவமனைக்குப் புத்துயிர் அளிக்க முன்வந்துள்ளனர் என்பது ஓர் ஆறுதலான செய்தியாகும். எமது நட்பிற்குரிய அந்த நல்லுள்ளங்களின் வேண்டுகோளின்படி, நாம் ஒரு First Hand Report எடுப்பதற்காக 'ஷிஃபா'வுக்குச் சென்றோம்.

எமக்கு 'ஷிஃபா'வின் எல்லாப் பகுதிகளும் சுற்றிக் காட்டப்பட்டன. 'மாஷா அல்லாஹ்!' இதே Infrastructure வேறு ஊர்களில் இருந்தால், இன்றைக்கு இதன் நிலையே வேறாக இருந்திருக்கும். எல்லா வசதிகளும் இருந்தும், அதிரையின் மருத்துவச் சேவையில் இந்த 'ஷிஃபா'வுக்கு உரிய இடமில்லாமல் போனதற்கு என்ன காரணம்? யார் யார் காரணம்? கேள்விகளால் கவலைதான் கூடிற்று! இது ஒரு Full-fledged Hospital என்ற தகுதியில், இதன் மறுமலர்ச்சிக்கான தேவைகள் யாவை என்று ஆராய முயன்றோம்.

அப்போதுதான், இந்த மருத்துவமனைக்காக அண்மையில் பணியமர்வு பெற்ற மகப்பேறு மருத்துவர் டாக்டர் கோமதி MBBS, DGO அவர்கள் 'ஷிஃபா'வுக்குள் இன்முகத்துடன் நுழைந்தார்கள். அந்நேரத்தில் அவர்களுக்கு நோயாளி ஒருவரும் இல்லாததால், நமக்கு அவர்களுடன் மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு கிட்டியது.

டாக்டர் கோமதி அவர்கள் நமதூருக்குப் புதியவர் அல்லர். 'ஷிஃபா'வில் சில ஆண்டுகள் பணியாற்றியதன் பின்னர், சஊதி அரேபியா, யமன் போன்ற அரபு நாடுகளில் சில ஆண்டுகள் மருத்துவச் சேவை செய்துவிட்டுத் திரும்பி வந்துள்ளார்கள். 'ஷிஃபா'வின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்களின் அன்பழைப்பை ஏற்று, இந்த மகப்பேறு மருத்துவர் நமதூருக்கு வந்துள்ளார்கள். டாக்டர் கோமதி அவர்களைத் தற்போதைய 'ஷிஃபா'வின் இயக்குநர்கள் மிகுந்த பொருள் செலவில் வரவழைத்து, இங்குப் பணியில் அமர்த்தியுள்ளார்கள். டாக்டர் அவர்களின் பேச்சிலிருந்து, இந்த மருத்துவமனையை முன்னேற்றம் செய்யவேண்டும் என்ற அவரின் நோக்கம் தெரிந்தது. தலைமை மருத்துவர் என்ற முறையில், டாக்டர் அவர்கள் சில பரிந்துரைகளை முன்வைத்தார்கள். அவை முறையாக இதன் இயக்குநர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுவிட்டன. டாக்டரின் அயல்நாட்டு அனுபவங்களின் தாக்கம், அவர்களின் பரிந்துரைகளில் வெளிப்பட்டது.

மொத்தத்தில், 'ஷிஃபா'வுக்கு ஒரு Face-lifting அவசரத் தேவை. இதனை நாம் மின்னஞ்சல் மூலம் இதன் நலம் விரும்பிகளுக்குத் தெரிவித்துவிட்டோம். அவர்களும், இவை இன்றியமையாதவை என்றே உணர்கின்றனர். அதன் அறிகுறி, இப்போதே தென்படுகின்றது. அதாவது, எம் பரிந்துரைகளுள் சில இப்போதே செயலுருப் பெறத் தொடங்கியுள்ளன. மருத்துவ உபகரணங்கள் பழுது பார்க்கப்பட்டுப் பயன்பாட்டு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த MBBS பெண் மருத்துவர் (GP) ஒருவரும் அண்மையில் பணியமர்வு பெற்றுள்ளார். உள்ளூர் டாக்டர்களுள், டாக்டர் ஹகீம் MBBS, DA அவர்கள் தொடக்க காலம் முதல் 'ஷிஃபா'வுடன் ஏற்படுத்திக்கொண்ட சேவைத் தொடர்பு பாராட்டத் தக்கதாகும்.

மகப்பேறு சிறப்பு மருத்துவருடன் சில பரிந்துரைகளில் நாமும் ஒத்த கருத்தில் உடன்பட்டோம். அவற்றுள் ஒன்று, நன்கு பயிற்சி பெற்ற 'நர்ஸ்'கள் மிகத் தேவை என்பதாகும். சரியான பணியுடை (Uniform) அணிந்து, முறையாக அவர்கள் சேவை செய்யும்போது, நோயாளிகளுக்கு ஓர் ஆறுதல் உண்டாகின்றது.

குழந்தை நல மருத்துவர் ஒருவரின் தேவை பற்றியும் 'ஷிஃபா'வின் இயக்குநர்களிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கு, உடனடியாக, உள்ளூரில் பணிபுரியும் மருத்துவர் ஒருவரை on call basis பயன்படுத்திக்கொள்ளவும் ஏற்பாடு நடைபெறுகின்றது. தற்போது வருகை தரும் பல் மற்றும் 'ஹோமியோபதி' மருத்துவர்களின் சேவையும் மிகப் பயனுள்ளதாக இருக்கின்றது.

மருத்துமனையின் உள்ளும் புறமும் பல சீர்திருத்தங்களால் மிளிரப் போகின்றன, மிக விரைவில். நாம் வழங்கிய பரிந்துரைகளுள், கீழ்க்கண்டவை Long term projects என்ற அடிப்படையில், 'ஷிஃபா'வின் இயக்குநர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன:

      'ஷிஃபா'வின் சுற்றுச் சுவருக்குள், இங்கே பணி புரியும் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கான வீட்டு வசதி செய்து கொடுத்தல்.

•       புதிய மருத்துவப் பிரிவுகளுக்கான கட்டட வசதி செய்தல்.

•      'ஷிஃபா'வின் செலவினங்களை ஈடு செய்யப் போதுமான வருமானம் தரும் துறைகளைத் தொடங்குதல்.

• ஏழைகள் மற்றும் வசதியற்றவர்களின் சிகிச்சைகளுக்காகப் பொறுப்பேற்கும் நல்லுள்ளம் கொண்டவர்களை நியமித்தல்.

•     வருகையாளர்களின் வசதிக்காகப் பள்ளிவாசல் கட்டுவது.

தற்போதைய நிர்வாகிகளாகப் பட்டதாரிகள் இருவர் பணி புரிகின்றனர் என்ற செய்தி, கடந்த கால illiterate நிர்வாகிகளால் நம்பிக்கை இழந்தவர்களுக்கு ஓர் ஆறுதலான செய்தியாகும்.

இந்த மருத்துவமனை தொடங்க இருந்த கால கட்டத்தில், நமதூரின் தலைவர்களுள் ஒருவர் தொலைநோக்கோடு ஒரு பரிந்துரை செய்தாராம். அதாவது, இந்த 'ஷிஃபா' மருத்துவமனையைத் தஞ்சாவூரில் கட்டினால் நல்லதல்லவா? நம்மூர் மக்கள் வந்து தங்கித் தமக்குப் பிடித்த மருத்துவர்கள் மூலம் சிகிச்சை பெறுவார்களே. அதனால் பல டாக்டர்களின் தொடர்பு ஏற்படுமே என்பதெல்லாம் அப்பெரியவரின் ஆலோசனையாம். ஆனால், நம்மூர் மக்கள் வெளியூர்களுக்குப் போய் சிரமங்களை ஏற்கக் கூடாது; செலவினங்களைக் குறைக்கவேண்டும் என்றெல்லாம் கருத்துக்கொண்டு, எதிர்நீச்சல் போட்டு, மர்ஹூம் AMS முதலியவர்களால் இந்த மருத்துவமனை தொடங்கப் பெற்றதாம்.

அத்தகையோரின் நல்ல நோக்கங்கள் நிறைவேற நாமெல்லாம் பங்களிப்புச் செய்ய வேண்டாமா? எவ்வாறு பங்களிப்புச் செய்யலாம் என்றும், 'ஷிஃபா'வின் செலவினங்களை ஈடு செய்வதற்கு, இதன் வருமானத்தைப் பெருக்க என்னென்ன வழிகளைப் பின்பற்றலாம் என்றும் கருத்திடுங்களேன், பார்ப்போம்!


ஆக்கம்: அதிரை அஹ்மது


இந்த கட்டுரையை அதிரை சார்ந்த எல்லா வலைப்பூக்கள் மற்றும்  இணையதளங்களிலும் வெளியிடுமாறு கட்டுரையாளர் அவர்களால் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

14 comments:

தொடரும் பின்னூடங்களுக்கு முன்னர்.. முதலில் சிறப்பான ஆக்கமாக எடுத்து முன்வைத்த(மாமா) உங்களுக்கு ஒரு சொட்டு !

ஏற்கனவே கல்வி மேம்பாட்டுக்கான கட்டுரையிலும் ஒர் பின்னுடமிடிருந்தேன், அது மற்ற சகோதரர்களின் உடன்பட்ட கருத்து... "நமது ஃஷிபா நிர்வாகம் நமதூரைச் சேர்ந்த ஒன்று அல்லது இரண்டு பெண் மருத்துவர்களை அவர்களது செலவிலேயே உருவாக்கலாம் (இப்போதுதான் நம் பெண் மக்கள் கல்வியில் ஆர்வம் காட்டி வருகிறார்களே) அவர்களை அங்கே பணியமர்த்தி நமதூருக்கு சேவை செய்ய வைக்கலாமே, part of long term project. சிந்திக்கலாமே...

லிபரான் கமிசன் அறிக்கைபோல் ஒரு நல்ல முயற்சி பாராட்டுக்கள், இம்முறை அது சார்ந்த நிறுவனத்திலிருந்து ஆரம்பித்தது இன்று உலகளவில் நம்மூர் மக்களிடம் ஆலோசனை கேட்டது ஆரோக்கியமான செயல். அதுவும் ஆய்வுக்கு கொடுக்கப்பட்டவரும் சரியான சரியான நபர், வாழ்த்துக்கள்

நம் ஒவ்வொரு மனசிலும் ஊசலாடிய எண்ணங்களும் இதுவாகத்தான் இருக்கும். இன்ஷா அல்லாஹ் செயல்வடிவம் கொடுக்கலாம். சமுதாய நலன்களுக்காக, ஆரோக்கியம் பேணுவோம் என்ற ஒற்றை கருத்தோடு எல்லோரும் ஒன்றினைவோம்.

கூறப்பட்ட கருத்துகளோடு ஒத்து இங்கு சில ஆலோசனைகளை முன் வைக்க ஆசை படுகிறோம். இதற்கான முன் முயற்சிகளை துரிதப் படுத்துவது இக்கால கட்டத்தில் மிக அவசியம்.

1 எல்லோரும் ஏற்றுகொள்ளும்படியான வியாபார நோக்கோடு இச்சேவையை நகர்த்துவது காலத்தில் சிறந்தது, இருந்தாலும் ஏழை, எளிவர்களை புறக்கணிக்காமல் அவர்களுக்கே உறிய சில திட்டங்களை செவ்வனே நிறைவேற்றுவதும் அவசியம்.

2 வருடத்திற்கு ஒரு முறையாவது மக்களுக்கு தேவையான அனைத்து உடல் சார்ந்த மருத்தவ பரிசோதனை திட்டத்தை நடைமுறைப் படுத்துவது மிக அவசியம்

3 அதன்படி ஒவ்வொருவரின் (நோயாளிகளின் கடந்தகால) மருத்துவ தகவல்கள் திரட்டப் பட்டு அதை பைனரி டாட்டா மாற்றி சேமித்து வைத்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு மருத்துவர்களுக்கும் கணினி இணைப்பு கொடுக்கப்பட்டு அவ்வப்பொழுது வரும் நோயாளிகளின் வருகையை பதிவு செய்யவேண்டும். அவருக்கு என்ன மருத்துவம் செய்யப்பட்டது, மருந்தின் விவரம் போன்றவை அவ்வப்பொழுது பதியப் படவேண்டும். நோயாளிக்கு ஒவ்வாத (allergic) போன்றவைகள் பெயருக்கு அருகிலேயே கொடுக்கப் படவேண்டும்.

4 அவர்களுக்கு பேங்க் கார்டுகளைபோன்று மெடிகல் அக்செஸ் கார்டுகளை விநியோகிக்கவேண்டும். தேடுதல் பொறியில் அவர்களின் பெயர், பிறந்த திகதி, முகவரி குறிப்பிடுவது அவசியம் .

5 அக்செஸ் கார்டுகளை வைத்திருப்போருக்கு உறுப்பினர் அந்தஸ்து வழங்கி கட்டணத்தில் ஒரு சிலசலுகைகள் அளிக்கவேண்டும்.

6 மேற்கொண்டு மருத்துவமனையை நவீனப் படுத்த நிதி ஆதாரங்கள் தேவைப்பட்டால் வெளியூர்களில்/ வெளிநாடுகளில் உள்ள நம்மவர்களின் உதவியை நீண்ட கால கடனாகவோ அல்லது நன்கொடையாகவோ கேட்கலாம். அப்படி நிதி அளிக்க முன் வருபவர்கள் ஆயுள்கால உறுப்பினர் அந்தஸ்து வழங்கி சிலசளுகைகள் வழங்கலாம். இதற்க்கு முன் நிறுவனம் மக்களிடம் நம்பகத் தன்மையை ஏற்படுத்த உறுதிபத்திரத்தை statements of declaretion மக்களுக்கு கையகப்படுத்த வேண்டும்.

7 நிரந்தர அறுவை சிகிச்சை நிபுணரை நியமிக்க வேண்டும். உள்ளுரில் மற்றும் பக்கத்திலுள்ள ஊர்களிலும் அனைத்து மருத்துவர்களையும் ஒருங்கிணைத்து அவருகளுக்குண்டன அறுவை சிகிச்சை நோயாளிகளை நம்மூருக்கு கொண்டுவர பரிந்துரை செய்ய சொல்லவேண்டும்.

8 ஜாதி, மதம் பார்க்காமல் அந்தந்த தெருவில் ஒரு சில முகவர்களை நியமித்து, அந்த சமூகத்திடம் நிறுவனத்தைப்பற்றி செயல் பாடுகளையும் அதன் தேவைகள் மற்றும் வசதிகளையும் தெரிவித்தவண்ணம் இருக்கவேண்டும். இதனால் சமய நல்லிணக்கமும் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு.

9 அற்பனிப்புடைய ஒரு சில மருத்துவர்களை முக்கிய "மருத்துவமனை நிர்வாக இயக்குனராக" நியமித்தல் அவசியம். அவ்வாவ்பொழுது அவரின் ஆலோசனைகளை கேட்டு தேவைகேற்ப செயல்வடிவம் கொடுப்பது அவசியம்.

அதோடு...

இனி வரும் காலங்களில் ஷிஃபா (நவீன)மருத்துவமனை நம் சமுதாய மக்களின் நம்பிக்கைக்குரிய மருத்துவமனையாக விளங்க வேண்டும் யாவரின் ஆவல் !

எல்லோத்துக்கு ஒத்துழைப்பு அவசியம்ங்க...

நோய் நேரங்காலம் பார்த்து வருவதில்லை. எந்த நேரம் போனாலும் ஷிஃபா மருத்துவமனையில். மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என்ற வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் .

தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனைகளில் (சில)மாற்று மதத்தினர் நமக்கு தொழ வசதிகள் செய்து கொடுத்துள்ளார்கள்.
ஷிஃபா மருத்துவமனையில் நாம் முதலில் தொழுவதற்கு ஒரு பள்ளிவாசல் அமைதுகொள்வது மிக அவசியம்.

ஷிஃபா மருத்துவமனையில் என்னன்னா மருத்துவ வசதிகள் உள்ளது என்பதனை ஊர் மக்கள் அனைவர்க்கும் தெரியப்படுதிட வேண்டும் .

சிறப்பு மருத்துவ முகாம் நடத்த இருப்பதை முன்கூட்டியோ அந்தந்த முகல்ல கமிட்டிகளுகளுக்கு தெரியயப்படுதிட வேண்டும்

முகல்ல கமிட்டி பரிந்துரையின் கீழ் சிகிச்சை பெறவரும் ஏழ்மையானவர்களுக்கு இலவச சிகிச்சையோ அல்லது சிறப்பு கட்டணமோ அளிக்கவேண்டும்

முன்பு வெளிநாட்டில் இருந்து ஷிஃபா மருத்துவமனை கட்டுவதற்கு நிதி உதவி செய்த நல்லுள்ளங்களை (தற்போது)எங்கு உள்ளார்கள் என்று தெரிந்து அவர்கள் அனைவரையும் மருத்துவமனைக்கு அழைத்து அவர்கள் அனைவரைம் கௌருவபடுத்த வேண்டும்.

அஸ்ஸலாமு அலைக்கும். நம் சகோதரர்கள் நல்ல தொரு ஆலோசனையை வழங்கியுள்ளனர்.மேலும் மெடிகல் சாப்பில் தேவையான அனைத்து மருந்துகள்கும் இருக்கும் வண்ணம் பார்த்துகொள்ளனும் அதற்கு மருத்துவர்களின் கீழ் இயங்கும் ஒரு கண்காணிப்பாளர் நிறுவுவது அவசியம்.மேலும் இரத்த வங்கி (பிளெட் பேங்க்)அமைப்பது மிக,மிக அவசியம்.அதுபோல் அனைத்து நோயளிகளுக்கும் அவர்கள் சார்ந்த நோயின் தன்மை ,அவரின் இரத்த வகுப்பு(குரூப்)குறித்த அடையள அட்டை வழங்கினால் அவசர காலத்தில் உதவகூடும்.சர்கரை நோயாளிகளுக்கு மாத,மாதம் அலோசனை கூட்டம் அவசியம் நடத்தனும் 3 மாதத்திற்கு ஒருமுறை அவர்கள் இரத்தத்தின் குளுகோஸ் அளவு பரிசோதித்து அதன் படி நோயளிக்குத்தேவையான சிகிச்சை அளிக்கலாம்.மேலும் தினம் குலுகோஸின் அளவு சோதிக்கும் கருவியும் வழங்கலாம்(குறைந்த செலவில்)அதற்குண்டான முறையையும் சொல்லிக்கொடுக்கலாம்.

Assalamu Alaikum,

Well written article, its encouraging to see some effort is taken to uplift the Shifa back to its foundation. Unfortunately when we start any institution we always need to focus on long term sustainability.I hope the current administration does that, more importantly the people of Adirai should support our hospital.

Please do donate some of your Zakat to Shifa.

அருமையான சமுதாய பொறுப்பு நிறைந்த கட்டுரை...நீண்ட காலம் இதைப்பற்றி சிந்தித்தது உண்டு சகோதரர்களே...நீங்கள் நினைத்தால் ஷிஃஃபா மருத்துவமனைக்கு புத்துயிர் அளிக்கலாம்...பெரும்பாலன வீடுகளில் ஆண்கள் சொல்வதைதான் பெண்கள் கேட்கிறார்கள்..உங்கள் வீட்டில் உள்ளவர்களை நமதூரிலே சிகிச்சை அளிக்க ஊக்கம் அளியுங்கள்....பிறகு பாருங்கள்..தஞ்சாவுர் டாக்டர்கள் எல்லாம் அதிரைக்கு தேடிவருவார்கள்..ஷிஃபா மருத்துவமனையும் ஒரு டீமை உண்டாக்கி ஊரில் உள்ள ஓவ்வரு தெருவையும் அணுகி அவர்களிடம் உள்ள வசதிகளை எடுத்து கூறலாம்..ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும்...இதன் பயன் பிறகு தெரியும்

முதலில் இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதிய அதிரை அஹமது அவர்களுக்கு மிக்க நன்றி.

நல்ல முயற்சி, நம் ஷிஃபா மருத்துவமனை புத்துணர்வு பெரவேண்டும் என்று முழு முனைப்புடன் இருக்கும் புதிய நிர்வாகத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

ஷிஃபாவிற்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளை துடைத்து புதிய வடிவம் கொடுப்பது என்பது ஒரு மிகப்பெரிய சவால். புதிய நிர்வாகம் அச்சவால்களை எதிர்க்கொண்டு ஒரு நல்ல மருத்துவ சேவை நம் அதிரைக்கு கொண்டு வரவேண்டும் என்றால் நம் அதிரை மக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.

தஞ்சாவூருக்கும், பட்டுக்கோட்டைக்கும், சென்னைக்கும் மருத்துவத்துக்காக அலைந்துக் கொண்டிருக்கும் நம்மூர்வாசிகளுக்கு ஒரு நல்ல விடுவுகாலம் கிடக்கும் என்று நம்பிக்கையை புதிய நிர்வாகம் தங்களின் முதல் செயல் பாடுகளில் நிரூபிக்க வேண்டும்.

அதிரைநிருபர் மூலமும், மற்ற அதிரை வலைப்பூக்கள் மூலமும் அருமையான ஆலோசனைகளை நம் சகோதரர்கள் வழங்கிவருகிறார்கள்.

புதிதாக ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி, அதை மக்களிடம் கொண்டு சேர்த்து நம்பிக்கை ஏற்படுத்துவது என்பது மிக மிக சுலபம். ஆனால் ஏற்கனவே நளிவடைந்துள்ள ஒரு நிறுவனத்தை தூக்கி நிறுத்துவது என்பது மிகக் கடினமான சவால்.

இச்சவால்களை எதிர்க்கொள்ளவேண்டுமானால், இதற்காக அதிரையில் உள்ளவர்களிடமும், வெளியூர்களில் இருக்கு அதிரைவாசிகளிடமும் ஒரு MARKETING RESEARCH ஒன்றை செய்ய வேண்டும். கட்டாயம் நிர்வாகம் செய்தாக வேண்டும், இதை ஒரு MARKETING RESEARCH நிறுவனத்தின் உதவியுடன் செய்ய வேண்டும். QUESTIONAIRE தயார் செய்து மக்களிடம் கருத்துக்களை கேட்க வேண்டும், மருத்துவ அடிப்படையில் நம்ம ஊர் மக்கள் அதிரை ஷிஃபா மருத்துவமனையிடம் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என்று MARKETING RESEARCH மூலம் நிச்சயம் சரியாக அறிந்துக்கொள்ள முடியும் தெரியும்.

சேகரித்த QUESTIONAIREயை வைத்து ஒரு நல்ல MARKETING RESEARCH COMPANYயில் கொடுத்தால் நமக்கு நல்ல பயனுல்ல ஆலோசனைகள் கிடைக்கும். அதை வைத்து நல்ல ஒரு சிறப்பான மருத்துவனையாக நம்ம ஷிஃபா மருத்துவமனையை மாற்றலாம்.

இன்னும் பழைய சிந்தனை, பழைய அனுகுமுறையையே பயன்படுத்தி வந்தால், ஷிஃபா மருத்துவமனை ஒரு மருத்துவமனையாக அல்லாமல் அதிரையின் வரலாற்றில் உள்ள பழையக் கட்டங்களில் ஒரு கட்டடமாகத்தான் போதும். அல்லாஹ் காப்பாத்துவானாக.

//சிறப்பு மருத்துவ முகாம் நடத்த இருப்பதை முன்கூட்டியோ அந்தந்த முகல்ல கமிட்டிகளுகளுக்கு தெரியயப்படுதிட வேண்டும் //

//ஷிஃபா மருத்துவமனையும் ஒரு டீமை உண்டாக்கி ஊரில் உள்ள ஓவ்வரு தெருவையும் அணுகி அவர்களிடம் உள்ள வசதிகளை எடுத்து கூறலாம்..//

சகோதரர்கள் யாசிர், ஷாஹுல் ஹமீது சொன்னது போல் ஷிஃபா நிர்வாகம் முஹல்லாவாசிகளை சந்தித்து (தப்லீக் ஜமாத் செய்வது போல்) மருத்துவமனையின் வசதிகள் பற்றியும், அதன் வசதிகள் பற்றியும் முஹல்லாவாரியாக மக்களிடம் எடுத்துச் சொல்லாம். நிச்சயம் இது ஒரு நல்ல பயனை பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

ஹலோ அதிரை நிருபர் குழு உங்கள் வேண்டுகோளை ஏற்று ஷிபா ஆஸ்பத்திரி செய்தி வெளியிட்டுள்ளேன்

கட்டுரையாளரின் கோரிக்கை ஏற்று தங்களின் தளங்களில் வெளியிட்ட நம் அதிரை வலைப்பூக்கள், மற்ற வலைப்பூக்கள் அனைத்திற்கு மிக்க நன்றி.

ஷிஃபா மருத்துவமனை புத்துணர்வு அடைவதற்காக இன்னும் பல பயனுள்ள யோசனைகள் வரவேற்கப்படுகிறது.

நம் அதிரை வலைப்பூக்களில் வரும் கருத்துக்களுடன் ஷிஃபா மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பாக முதல் கருத்தும் இங்கு பதிந்தால், அதன் தொடர்ச்சியாக இன்னும் பல கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ள ஏதுவாக இருக்கும் என்று கருதுகிறோம்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More