Oct 10, 2010

சிந்திக்க சில நபிமொழிகள் - 1

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு

சிந்திக்க சில நபிமொழிகள்

உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதது வரை (முழுமையான) ஈமான் கொண்டவராக மாட்டார் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல் : புஹாரி (11).

மக்களை அமைதியுடன் செவி தாழ்த்தி கேட்கும்படி செய்வீராக! எனக்கூறிவிட்டு (மக்கள் அமைதியுற்ற பின்னர்) எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர்; கழுத்தை ஒருவர் வெட்டிக்கொள்ளும் காபிர்களாக மாறிவிட வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் உரையில் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜரீர் (ரழி) நூல்: புஹாரி (121).

ஒரு கட்டிடத்தின் பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திகொண்டிருக்கிறதோ அது போலவே ஒரு முஃமின் இன்னொரு முஃமின் விஷயத்தில் நடந்து கொள்ள வெண்டும். என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தங்கள் விரல்களை கோர்த்துக் காட்டினார்கள். அறிவிப்பவர் : அபூ மூஸா (ரழி) நூல்: புஹாரி (481).

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரனாவான். அவனுக்கு அவன் அநீதியிழைக்கவுமாட்டான், அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும் படி) கை விட்டு வடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகிறாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ் ஈடுபடுகிறான். எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகிறாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) நூல்: புஹாரி (2442).

உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்திற்கு உள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனக்கு உதவி செய் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்திற்கு உள்ளானவருக்கு நாங்கள் உதவி செய்வோம் ஆனால் அக்கிரமக்காரனுக்கு எப்படி உதவி செய்வோம்? என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவனை அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து விடு(ங்கள்) இதுவே நீ(ங்கள்) அவனுக்கு செய்யும் உதவி என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல்: புஹாரி (2444).

ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும், (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்தக்கொண்டிருக்கின்றன, அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சல் கண்டு விடுகிறது என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : நுஃமான் பின் பஸீர் (ரழி) நூல்: புஹாரி (4011).

ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள், பிணங்கிக்கொள்ளாதீர்கள், (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்த ஒரு முஸ்லிமும் தம் சகோதரனுடன் முன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரழி) நூல்: புஹாரி (4045).

மக்களை அதிகமாக சுவர்க்கத்தில் புகுத்துபவை இறையச்சமும் நற்குணமும்தான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல் : திர்மிதீ, ஹாகிம்.

இறைநம்பிக்கையாளன் குத்திப் பேசுபவனாகவும் அடிக்கடி சாபமிடுபவனாகவும் இருப்பது இல்லை. மானங்கெட்ட செயல்புரிபவனாகவும், சண்டையில் தீய வார்த்தைகள் பேசுபவனாகவும் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூதர்தா (ரழி). நூல் : ஹாகிம்.

வெட்கம் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம்.

ஒருவர் மற்றவர்மீது அக்கிரமம் புரியாமல், ஒருவர் மற்றவர் மீது பெருமை கொள்ளாமல் பணிந்தவர்களாக இருங்கள் என்று எனக்கு வஹி (இறைசெய்தி) அறிவிக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இயான் இப்னு ஹிமார் (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம்.

தொகுப்பு: சின்னகாக்கா

4 comments:

முத்தான ஹதீஸ்கள்...நன்றி சின்னகாக்கா

இதே மாதிரியான சிந்தனைகளை தொடர்ந்து ஞாபகப் படுத்திக் கொண்டிருங்கள் இன்ஷா அல்லாஹ்.. நல்ல பதிவும் நல்ல முயற்சியும் கூட.

அஸ்ஸல்லாமு அலைக்கும்.இதுபோல் நினைவூட்டல் அவசியமான ஒன்று வாழ்த்துக்கள்.

நமது வழ்கை குர்-ஆன் ஹதீஸாக இருக்கவேண்டும். இன்ஷாஅல்லாஹ் இந்த பொன்மொழிகள் நமக்கு வழிகாட்டும்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More