Welcome to our website. Neque porro quisquam est qui dolorem ipsum dolor.

Lorem ipsum eu usu assum liberavisse, ut munere praesent complectitur mea. Sit an option maiorum principes. Ne per probo magna idque, est veniam exerci appareat no. Sit at amet propriae intellegebat, natum iusto forensibus duo ut. Pro hinc aperiri fabulas ut, probo tractatos euripidis an vis, ignota oblique.

Ad ius munere soluta deterruisset, quot veri id vim, te vel bonorum ornatus persequeris. Maecenas ornare tortor. Donec sed tellus eget sapien fringilla nonummy. Mauris a ante. Suspendisse quam sem, consequat at, commodo vitae, feugiat in, nunc. Morbi imperdiet augue quis tellus.




Showing posts with label ரமலான். Show all posts
Showing posts with label ரமலான். Show all posts

Aug 30, 2010

என்றும் இனிக்கும் ந‌ம் ப‌ழைய‌ ர‌ம‌ளான் மாத‌ நினைவுக‌ளிலிருந்து....‏

'வல்லாணாலையிலெ யாங்கம்மா இதெல்லாம்' என்று (மாப்பிள்ளை) சம்மந்தி வீட்டுக்காரர்கள் சம்பிரதாயத்திற்கு வாய்விட்டு சொல்லி வண்டி நிறைய                                                             விருப்பத்தை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு அதை வெளிக்காட்டாமல் நாசூக்காக‌ (இதே பாணியில் தானே சீர், சீராட்டுக்களையும், முழு வீட்டையும் பெண்வீட்டினரிடமிருந்து கேட்டு வாங்கினீர்கள் என்பது வேறு சமாச்சாரம்) வாங்கும் வாடா, சம்சாவுடன் வரும் கஞ்சி தான் அவ்வப்பொழுது இருவீட்டாருக்கு இடையில் கட்டப்பட்டுள்ள உறவுப்பாலத்தில் ஏற்படும் உரசல், விரிசல்களை கொத்தனார் யாருமின்றி சரிசெய்யும் சிமிண்ட் கலவை போன்றதாகும்.

மரியாதை இல்லாத 'வாடா'வாக இருந்தாலும் அதற்கும் மரியாதை கிடைக்கும் அவ்வேளையில்.

உள்ளூர் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் ரமளானின் ஒரு மாதகாலம் ஊழலின்றி இனிதே அரங்கேறும். இவ்விளையாட்டுப்போட்டிகளுக்கு ஸ்பான்சர் யாருமில்லை. கோப்பைகளும் இல்லை. ஆனந்தமே அனைவரின் எதிர்பார்ப்பு.

புதுக்க‌விஞ‌ன் யாரேனும் இப்ப‌டி எழுதினாலும் எழுத‌லாம் "த‌னி ம‌னித‌னுக்கு க‌ஞ்சி கிடைக்க‌வில்லையெனில் இவ்வுல‌கினை ச‌பித்திடுவோம்" என்று. கார‌ண‌ம் ர‌ம‌ளானில் நோன்புக்க‌ஞ்சிக்கு அவ்வ‌ள‌வு முக்கிய‌த்துவ‌ம் கொடுக்க‌ப்ப‌டும்.

உண்மையில் நோன்பு திற‌ந்த‌தும் பெரும்பான்மையான‌ வீட்டில் இஞ்சை கொஞ்ச‌ம் த‌ட்டிப்போட்டு காய்ச்சி த‌ர‌ப்ப‌டும் 'தேத்த‌ண்ணி' த‌ரும் சுறுசுறுப்பையும், விறுவிறுப்பையும் இன்றைய‌ கால‌ உற்சாக‌ குளிர்பாங்க‌ள் த‌ந்திடுமோ?

வீட்டின் கொடியில் வெயிலில் உலருவதற்காக தொங்கிக்கொண்டிருக்கும் துணிகள் போல் 'கபாப்' க‌டையில் இரும்புக்க‌ம்பிக‌ளுக்கிடையே உஜாலா போடாம‌ல் வெறும் ம‌சாலா மட்டும் போட‌ப்ப‌ட்ட‌ க‌றித்துண்டுக‌ள் தொங்கிக்கொண்டிருக்கும். அதை நினைக்கும் பொழுதே பாக்கெட்டில் காசில்லாம‌ல் வாயில் எச்சில் ஊறும்.

அன்று ஓடி, ஆடி விளையாடிய‌ எத்த‌னையோ வ‌ய‌திற்கு மூத்த‌வ‌ர்க‌ள், இளைய‌வ‌ர்க‌ள் இன்று அட‌ங்கிப்போய் விட்டார்க‌ள். ஆம் ம‌ண்ண‌றையில் அமைதியாய் ம‌றைந்து போய் விட்டார்க‌ள்.

காக்கையின் எச்ச‌ம் போல் காண‌ப்ப‌டும் மடமட புது வேட்டியின் ச‌ரிவ‌ர‌ கிழிக்க‌ப்ப‌டாத‌ லேபில். அதை ப‌ட‌ப‌ட‌ உள்ள‌த்துட‌ன் ச‌ட‌ச‌ட‌ ப‌த்து ரூபாய் புது நோட்டு ச‌ட்டைப்பைக்குள் ப‌துங்கி இருக்கும்.

இன்று அர‌பு நாடுக‌ளிலிருந்து விடுமுறையில் பெருநாளை குடும்ப‌த்துட‌ன் கொண்டாடிட எப்படியும் ஊர் செல்ல‌ திட்ட‌மிட்டிருப்ப‌வ‌ர்க‌ள் இணைய‌ த‌ள‌ங்க‌ள் மூல‌மாக‌வோ அல்ல‌து விமான‌ப்ப‌ய‌ண‌ச்சீட்டு ஏற்பாடு செய்து கொடுக்கும் ஏஜென்ட்க‌ள் மூல‌மாக‌வோ த‌ன் ப‌ய‌ண‌த்தை முன் ப‌திவு செய்ய‌ ப‌ர‌ப‌ர‌ப்புட‌ன் செய‌ல்ப‌டுவ‌ர். இந்த‌ ப‌ர‌ப‌ர‌ப்பை அன்றே நாங்க‌ள் பெருநாளைக்கு நாள் வாட‌கைக்கு சைக்கிள் எடுத்து ஊர் சுற்ற‌ 'ப‌ரிதா' ம‌ற்றும் 'வின்ன‌ர்' சைக்கிள் க‌டைக‌ளில் காட்டி இருக்கிறோம்.

பெருநாள் இரவு சைக்கிளில் ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் ப‌ட்டுக்கோட்டை சென்று வ‌ந்தால் ஏதோ பாருல‌கை சுற்றி வ‌ந்த‌து போல் எண்ணிப்பெருமித‌ம் கொள்வோம்.

உள்ளூர் தையல்கடைகளில் இன்று மேற்க‌த்திய‌ நாடுக‌ள் செல்ல‌ விசா வ‌ழ‌ங்கும் அய‌ல்நாட்டுத்தூத‌ர‌க‌ங்க‌ளில் காத்துக்கிட‌க்கும் ம‌க்க‌ள் போல் காத்துக்கிட‌ந்தோம்.

கால‌ங்க‌ள் ப‌ல‌ ஓடி விட்டாலும் ந‌ம் நினைவுகள் இன்றும் க‌யிறால் செய்ய‌ப்ப‌ட்ட அதே ர‌யில் வ‌ண்டியில் ஏறி ராஹ‌த்தாக‌ சுற்றி வருகிற‌து இராப்ப‌க‌லைத்தாண்டி. (நென‌ப்பு தான் பொழ‌ப்பெக்கெடுத்துச்சாண்டு யாரும் சொல்ல‌ மாட்டீர்க‌ள் என்று ந‌ம்புகிறேன்).

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொட‌ரும் இறைவ‌ன் வாய்ப்ப‌ளித்தால்.

--மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

Aug 8, 2010

ரமளானே வருகவே...!!!


பகலெலாம் பசித்து
இரவெலாம் விழித்து
அகமெலாம் நிறைந்து
                                                                                                                                            
அல்லாஹ்வைத் துதித்து
முகமத்(ஸல்) உம்மத்து
முழு மாதம் நோன்பு பிடித்து
அகமும் முகமும்
அமல்களால் அலங்கரித்து
இகம் பரம் ஈடேற்றமும் இறையின்
ரகசிய அறிவும் பெற்று தரும்
ரமளானே வருகவே...!!!

பசித்தவரின் பசியினை
பட்டு நீ உணர்த்திடும் பட்டினி- ஊனில்
வசித்திடும் ஷைத்தானை
வதைத்திட வைத்திடும் உண்ணாமை

குடலுக்கு ஓய்வுக் கொடுத்து;
குர்-ஆனின் ஆய்வு தொடுத்து;- மஹ்ஷர்
திடலக்கு தயார்படுத்துதல் உன் கவனம்;
திண்ணமாய் கிட்டும் சுவனம்

பாவம் தடுத்திடும்
பாதுகாப்பு கேடயம்;
கோபம் வென்றிடும்
குணத்தின் பாடம்

அல்லாஹ்வுக்காகவே நோன்பு;
அல்லாஹ் மட்டுமே அறியும் மாண்பு
அல்லாஹ்வே அதற்கான சாட்சி;
அல்லாஹ்வே தருவான் மாட்சி

வானில் இருந்த இறைவேதம்
வஹியின் வழியாக
தேனினும் இனிய திருநபியின் (ஸல்)
திருவதனம் மொழிய வந்த மாதம்

ஆற்றல் மிக்கதோர் இரவின் பிறப்பு;
ஆயிரம் மாதங்களினும் மிக்க சிறப்பு;
போற்றிடுவோம் பெற்றிடுவோம் அவ்விரவு;
புனிதமிகு ரமளானின் வரவு...!!!

ஈகைத் திருநாளாம்
ஈத் பெருநாளைக்கு முன்பாகவே
வாகைத்தரும் பித்ரா தர்மம்
வழங்குவோம் ஏழைகட்கு அன்பாகவே

ரமளானே வருகவே...!!!


"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்

நன்றி: எங்கள் நண்பர்

Jul 26, 2010

என்றும் இனிக்கும் நம் (பழைய) நோன்பு கால நினைவுகள்.

ஒரு காலத்தில் நம்மூரில் புனித ரமளான் நோன்பு வர இருக்கின்றது என்றாலே ஆண், பெண், பெரியவர் முதல் சிறியவர் வரை ஒரு இனம் புரியாத பரபரப்பு                                             நம்முள் தானாகவே ஒட்டிக்கொள்ளும் அந்த நாள் நம் வாழ்வில் வந்த நாள்.

இன்று உலக வெப்பமயமாதலால் பனி போர்த்திய அண்டார்ட்டிக்கா கண்டமே ஐஸ் கிரீம் போல் உருகி வந்தாலும், ஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டிருந்தாலும் நம் பழைய கால நினைவுகள் மட்டும் ஒரு போதும் பழுதடைவதில்லை.

அன்று நமக்கு அறிவுரை சொன்ன எத்தனையோ பெரியவர்களும், மார்க்கத்தை முறையே போதித்த மார்க்க அறிஞர்களும், "மாக்காண்டி" என்று பயமுறுத்தப்பட்டவர்களும், அதனால் பயந்து அடம் பிடிப்பதை அடக்கிக்கொண்டு உணவு உட்கொண்ட சிறுவர்களும். அவர்களில் எத்தனையோ பேர் இன்று மண்ணோடு மண்ணாகி விட்டார்கள். நமக்கு முன் இறைவனடி போய்ச்சேர்ந்து விட்டார்கள்.

நம்ம ஊர் குறிப்பாக வயதான பெண்மணிகள் அவர்களுக்கென்று அரபு, ஆங்கில, தமிழ் மாதங்கள் போக பன்னிரண்டு மாதங்கள் தனியே உருவாக்கி அதை நடு ராத்திரியில் எழுப்பிக்கேட்டாலும் வரிசை தவறாது கச்சிதமாக சொல்வார்கள். (கீழே நான் குறிப்பிட்ட வரிசை சரியா? அல்லது தவறா? என்று நம்மூர் மூத்த குடிமகன்கள் சொன்னால் நல்லது) ஷிர்க் எது? பித்'அத் எது? என்று விளக்கமாக தெரியாத காலம் அது என்று சொல்லலாம்.

1. முஹர்ரம்
2. சேலாந்திரி
3. நாகூர் ஆண்டவர் கந்தூரி
4. மையதுநாண்டவோ கந்தூரி
5. முத்துப்பேட்டை கந்தூரி
6. கோட்டப்பட்டிணம் கந்தூரி
7. கடற்கரைப்பள்ளி கந்தூரி
8. காட்டுப்பள்ளி கந்தூரி
9. விராத்து
10.நோம்பு
11.இடையத்து
12. ஹஜ்ஜூ

புனித ரமளானை வரவேற்க விராத்து மாதத்தில் பெண்கள் காட்டும் பரபரப்பும், சுறுசுறுப்பும் நம்மை திகைக்க வைக்கும். ஆம். அவர்கள் வீடு வாசல் கழுவி, ஒட்டடை அடித்து, அரிசி மாவு இடிக்க வீட்டுக்கு ஆள் வரவைத்து, உரல், உலக்கைகளெல்லாம் அக்கம்பக்கத்து வீட்டில் இரவல் வாங்கி இடித்தும் (அது ஒரு மெஹா ப்ராஜெக் மாதிரி நடக்கும்), மளிகைக்கடை சாமான்கள் சிட்டை போடப்பட்டு நோன்புக்கு தேவையான எல்லா சாமான்களும் வாங்கி சுத்தம் செய்து அரைக்க வேண்டியதை அரைத்தும், டப்பாவில் அடைக்க வேண்டியதை அடைத்தும் எல்லாம் முறையே செய்யப்பட்டு தயார் படுத்தி வைப்பார்கள்.

நோன்பு வருவதற்கு ஒரு சில நாட்கள் முன்பே நம் முஹல்லாப்பள்ளிகளெல்லாம் அதை வரவேற்க தயாராகிக்கொண்டிருக்கும். சில பள்ளிகளில் வெள்ளையும் அடிப்பார்கள். மினாராக்களில் வண்ண விளக்குகள் மாற்றப்பட்டு நம் உள்ளங்களில் மத்தாப்பு கொளுத்தப்படும். நோன்பு கஞ்சி காய்ச்ச அங்கு தென்னங்கீற்றால் ஆன கொட்டகை போட மாட்டு வண்டியில் கீற்றும், கம்பும் அங்கு வந்திறங்கும். அத்துடன் நம் குதூகலமும் வந்திறங்கும். இவற்றை எல்லாம் இக்கால சிறுவர்கள் அனுபவிக்கிறார்களா? இல்லையா? என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். கம்ப்யூட்டர் யுகமாகிப்போன இக்காலத்தில் நிச்சயம் அவற்றை எல்லாம் தொலைத்தவர்களாகத்தான் அவர்கள் இருப்பர் என்பது என் நம்பிக்கை.

இன்று பெய்த‌ மழையில் துளிர் விடும் புல்,பூண்டு போல ஆங்காங்கே திடீரென தோன்றும் சம்சா, இரால் மண்டை புதைத்த வாடா விற்கும் கடைகள்.

(நீர் மூழ்கி) ஆழ்குழாய்க்கிணறுகளெல்லாம் இல்லாத அக்காலத்தில் குளங்களெல்லாம் அடுத்து வரும் மழைக்காலம் வரை தண்ணீரை தன்னகத்தே தாங்கி நின்றது நாமெல்லாம் குதித்து/குளித்து கும்மாளமிடுவதற்காக.

கண்களெல்லாம் சிவந்து, காதிலும், மூக்கிலும் கொஞ்சம் வாயிலும் தண்ணீரை தடையின்று உள்ளே செல்ல அனுமதித்து விட்டு பிறகு நோன்பு திறக்கும் சமயம் மிக சங்கையாக மரியாதை இல்லா வாடாவையும், முக்கோண‌ சம்சாவையும் கஞ்சிக்கோப்பையில் பிய்த்துப்போட்டு வெகுநேரம் ஆடாமல், அசையாமல் இருந்து மீனைக்கவ்வுவதற்காக காத்திருக்கும் கொக்கு போல இடி முழக்கமென இறங்கும் 'நகரா' சப்தத்தில் நோன்பு திறக்கும் து'ஆ கூட முழுவதும் சொல்ல நேரமில்லாதவர்களாய் மடக்கென தன் வரண்ட வாயிக்குள் கவிழ்த்த கஞ்சிக்கோப்பை நினைவுகள் இன்று உங்களுக்கு கொஞ்சமும் இல்லையா?

அந்த காலத்தில் சஹாபாக்கள் பதுருப்போருக்கு படையுடன் களத்திற்கு சென்றது போல் நோன்பு பிறை 17ல் பதுரு ரொட்டி வாங்க தெருதோறும் பொட்டியுடன் சென்று போரில் வென்று கனிமப்பொருள்களை கவர்ந்து வருவது போல் பொட்டி நிறைய (தேங்காய், அரிசி மாவு ரொட்டி, சர்க்கரை, வெள்ளடை) சாமான்களுடன் முஹல்லாப்பள்ளிக்கு கொண்டு வந்து சேர்த்த அந்த நினைவுகள் இன்று வந்து ஏனோ வந்து நம்மை ஏக்கமடையச்செய்கின்றது?

அன்று நோன்பு கால இரவில் இளம்காற்றில் ஒலி பெருக்கி மூலம் கரைந்து வரும் பள்ளிகளின் ஹிஜ்பு/குர்'ஆன் வசனங்களும், அதற்குப்பின் கொடுக்கப்பட்ட நார்சாவையும் இன்றும் அனுபவிக்க வேண்டும் என்று உள்ளம் அலைபாயுது ஏனோ?

அன்றிருந்தவர்கள் இன்றில்லை நம்மிடம். இன்றிருக்கும் நாமோ நாளை இருப்பதில் எவ்வித நிச்சயமும் இல்லை. நாம் எல்லாம் ஒரு நாள் நம்மைப்படைத்தவனிடம் மீளக்கூடியவர்களாக இருக்கின்றோம்.

உச்சி நேர பெரும் பசியில் ஆசை, ஆசையாய் வாங்கிச்சேர்த்து வைத்த திண்பண்டங்களும், நோன்பு நோற்றதும் வேண்டா/வெறுப்பாய் தீண்டாமல் காலை நேர வீட்டு வேலைக்காரிக்கு உணவாய் ஆகிப்போகும் அத்தனையும்.

அன்று நாம் வெகுதூர வெள்ளைக்கார நாடுகள் செல்லாமல் அரபு நாட்டுடன் அடக்கமாய், அமைதியாய் இருந்தோம். குடும்பம், உறவு பேணினோம். அன்பும், அரவணைப்பும் அதிகம் கண்டோம். இன்றோ நம் வீட்டு பெரும் தேவைகளுக்காக அழகாய் தன் மெழுகால் கட்டப்பட்ட தேன்கூட்டை கல்லெறிந்து சிதைத்தது போல் எட்டு திசைக்கும் திரும்பி ஒன்று சேர இயலாதவர்களாய் தேனீக்கள் போல் பறந்து போனோம்.

சீரும் சிங்கங்களும், பாயும் புலிகளாய் நோன்பு கால இரவில் ஆடித்தீர்த்த விளையாட்டுக்களும், தூக்கில் தொங்கும் மின் விளக்கின் கீழ் ஆடிய கேரம் போர்டு விளையாட்டும் கடைசியில் தேவையில்லாமல் கொண்டு வந்து சேர்த்த தெரு சண்டைகளும் இன்று இல்லாமல் போனதில் நமக்கு (வருத்தம் கலந்த) சந்தோஷம் தான்.

அயர்ந்து உறங்கும் நம் வீட்டுப்பெரியவர்களை சஹர் நேரத்தில் அலாரம் வைத்தாற்போல் வந்தெழுப்ப வரும் (தப்ஸ் அடிக்கும்) சஹர் பக்கிர்சாவும், அவருடன் (அரிக்கலாம்பு) விளக்கு எடுத்து வரும் சிறுவனும் இன்றும் இருக்கிறார்களோ? இல்லையோ? தெரியவில்லை.

மேனி தெரிய அணிந்த மார்ட்டின் சட்டையும், பாக்கெட்டிற்குள் பளபளக்கும் பத்து ரூபாய் சலவை நோட்டும், அதன் மேல் கம்பீரமாக காட்சி தரும் ஹீரோ பேனாவும், காதில் சொறுகப்பட்ட நறுமண அத்தரில் நனைத்த பஞ்சும், காலில் சரசரவென சப்தம் செய்யும் சிகப்பு நிற பூ வைத்த சோலாப்பூரி செருப்பும் அதை நினைக்கும் இன்றும் நம் உள்ளத்தில் பேரின்ப நீர்வீழ்ச்சியை உண்டாக்கி அதில் வண்ண,வண்ண வானவில்லை வரச்செய்கின்றது.

புனித ரமளான் மாத கடைசிப்பத்து நாட்களின் மகத்துவம் குர்'ஆனிலும், ஹதீஸிலும் அதிகம் சொல்லப்பட்டதை சரிவர‌ விளங்காமல் கடைசிப்பத்தை கடைத்தெருவிலும், துணிமணி எடுக்க பட்டுக்கோட்டை, தஞ்சாவூருக்கு படையெடுத்துச்சென்றதும், உள்ளூர் தையல்கடைக்காரர்களை பண்டிகைகால ரேசன்கடைகள் ரேஞ்சுக்கு ஆக்கி அதில் அநாவசியமாய் ஆனந்தமும் கண்டோம்.

பள்ளிகளில் தராவீஹ் தொழுகையில் செய்த சிறுபிள்ளைத்தனமான குசும்புகளும், பாதியில் தொழுகையில் உறங்கிய உறக்கமும் பின் நார்சாவை நினைத்து வந்த சுறுசுறுப்பும் அதை வரவழைத்த‌ தேனீரும் நீர் அண்டார்டிக்காவே சென்றிருந்தாலும் உம்மை மெல்ல அசை போட வைக்கும் அந்த நினைவுகள்.

இவைகளெல்லாம் இன்று இல்லாமல் போனாலும் கடந்த காலத்தை இங்கு மெல்ல அசை போட ஆட்களுமா இல்லாமல் போய்விடுவார்கள்?

மேலே என்னால் ஞாபகப்படுத்த முடிந்ததை இங்கு எழுதி விட்டேன். ஏதேனும் உங்கள் நினைவுகளிலிருந்து விடுபட்டு இருப்பின் நீங்கள் பின்னூட்டம் மூலமோ அல்லது தனி கட்டுரை மூலமோ தாராளமாக தொடரலாம் என் அன்பிற்கினியவர்களே.

நம்மை நெருங்கிக்கொண்டிருகும் புனித ரமளானின் பரக்கத்தால் வல்ல ரப்புல் ஆலமீன் ஹலாலான நம் எல்லாத்தேவைகளை பூர்த்தி செய்தும், பெரும் ஆபத்துக்களிலிருந்தும், விபத்துக்களிலிருந்தும், விபரீதங்களிலிருந்தும் நம்மை காத்தருளி, ஈருலகிலும் எல்லாப்பாக்கியங்களையும் பெற்றவர்களாய் எம்மை ஆக்கி, உலக ஆசாபாசங்களுக்காக இஸ்லாத்திலிருந்து தடம்புரளாமல் கடைசி மூச்சு உள்ளவரை இஸ்லாத்தின் இன்பத்தை சுவைத்தவர்களாய், அச்சுவையுடனே எம்மை படைத்த உன்னிடம் நாங்களெல்லாம் வந்து சேர வேண்டும் அதற்கு ரப்புல் ஆலமீனான நீ எங்களுக்கு நல்லருள் புரியவேண்டும் (ஆமீன் யாரப்பல் ஆலமீன்) என்று அவனை இறைஞ்சிக்கேட்டு கொண்டவனாய் என் கட்டுரையை இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.

இன்ஷா அல்லாஹ் என்றும் பசுமையான நம் நினைவுகள் தொடரும்......

மு.செ.மு. நெய்னா முஹம்மது

27.07.2010

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More