
பாரம்பரிய ஆடைகள் (traditional dress) என்று இதுவரை நம்மிடம் என்ன இருக்கிறது என்று நான் இங்கே ஆராயவில்லை, இருந்தாலும் ஹஜ் பெருநாள் தொழுகையை ஈத்கா மைதானத்தில் முடித்து விட்டு வெளியில் வரும்போது அங்கே எனது பார்வைக்குள் சிக்கிய நமது அதிரைப்பட்டினத்து மக்கள் உடுத்தியிருந்த கண் கவரும் மேல் சட்டைகளும் அதன் மிடுக்கும் அதிலும் குறிப்பாக இளைஞர்களை பார்த்ததும் என்னுள் எழுந்த ஒரு சில எண்ண ஓட்டங்களை இங்கே கோர்வையாக்கிப் பார்க்கிறேன்.
நம்மவர்கள் உடுத்தும் ஆடைகளில் முக்கிய பங்கை வகிப்பது மேல் சட்டை அது முழுக்கை சட்டையாகட்டும் அரைக்கை சட்டையாகட்டும் இதன் பயன்பாடுகள் வயது வித்தியாசமில்லாமல் யாவருக்கு ஒத்துப் போகக் கூடிய வடிவமைப்பில் அவரவர் அளவுக்கு தைத்து போட்டு வந்திருக்கிறோம்.
நம்மூரில் சட்டை தைத்து தருவதற்கென்று நிறைய தையல்காரர்கள் இருந்தாலும் அதில் எத்தனை பேர் மண்ணின் மைந்தர்களாக கோலோச்சினார்கள்?, பெரும்பாலும் வெளியூரிலிருந்து வந்தவர்களும் அல்லது பிற மதத்தைச் சார்ந்தவர்களும் தான் இத் தொழிலில் ஊன்றி நிலைத்திருந்திருக்கிறார்கள்.
முதலில் உடல் உயரத்திலிருந்து முக்கால் உயரத்திற்கு இருந்த சட்டை சற்று உயரம் குறைந்து தொடைவரை தொங்கியது இன்று இடுப்பு வரை நிற்கிறது ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கென்று பிடித்தமான தையல்காரர்களை தேர்ந்தெடுத்து அல்லது அன்றைய கலாப் போக்கிற்கு (trend) ஏற்றார்போல் தைத்து உடுத்திக் கொண்டனர்.
மிதப் பட்ட காலத்தில் ஆயத்த ஆடைகளின் (readymade dress) பக்கம் மோகம் சூழ்ந்தது அப்போதும் இளையவர்கள் தத்தமது மோகத்தை காட்டினர், இன்னும் தயார் நிலையில் இருக்கும் மேல் சட்டைகளை வாங்கி உடுத்துவதில் நம்மவர்களின் ஆர்வம் குறைந்து விடவில்லை.
சில ஆண்டுகளாக நமது ஊரிலிருப்பவர்களை மிகவும் உண்ணிப்பாக கவனித்தால் இன்றைய இளைஞர்களின் ஆடை உடுத்தும் அற்புதங்களும் சட்டை வேட்டியுடன் தெரியும் ஒரு பணக்கார புறத் தோற்றம் (rich look) அசர வைக்கிறது. புடைத்த காலருடன் விரைப்பான மடிப்பு கலங்காத, உடலோடு ஒட்டி உறவாடும் அழகு சட்டைகள்தான் இப்படி இளைவர்களின் மீது யாவரின் பார்வையையும் நிமிர வைக்கிறது.
வசதியுடையவர்களும் சரி, அவ்வகையான சட்டைகளை தைத்து / எடுத்துப் போடும் தகுதியுடையவர்களும் சரி அவர்களின் ரசனை வியக்க வைக்கிறது. படித்த இளைஞர்களானாலும், படிப்பை பாதியில் விட்டவர்களானாலும், பள்ளிக் கூடம் பக்கமே போகாதவர்களாக இருந்தாலும் இவர்களின் மேல் சட்டை தேர்ந்தெடுக்கும் ரசனை எப்படி ஒன்றாகவே இருக்கிறது என்பதை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.
இவ்வகையான ஆடைகள் கொடுக்கும் மிடுக்குதான் பெரும்பாலான இளைஞர்களுக்கு (திருமண) விலை நிர்ணயம் செய்கிறது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதுதானே ? வெளியில் உடுத்தி வரும் ஆடையும் அனிந்திருக்கும் மேல் சட்டையும் பெற்றெடுத்துக் கொடுக்கும் மரியாதைக்கு எத்தனை இளைஞர்கள் தகுதியாக இருக்கிறார்கள் ?
மிடுக்கான உடையிருக்கிறது ஆனால் துடுக்கான நடையில்லை, அழகா இருக்கான் ஆனால் ஆடை உடுத்தத் தெரியவில்லை இப்படியாக விமர்சனம் செய்பவர்கள் ஆடையிலிருக்கும் அழகு அகத்தில் இருக்கிறதா என்றும் பார்ப்பதில் சற்றே தடுமாறிவிடுகிறார்கள்.
எதற்கு இவன் இப்படி இங்கே சொல்கிறான் என்று நீங்கள் கேட்கலாம். எனக்கும் இந்த ஹஜ் பெருநாளைக்கு ஊரிலிருந்து தைத்து அனுப்பிய மேல் சட்டைதான் பெருநாள் சட்டை ! ஏன்னா அதுதான் இன்றைய காலப் போக்கிற்கான மேல் சட்டையாக இருக்கிறது அதிரைப்பட்டினத்தில் எவ்வித தெரு பாகுபாடின்றி யாவருக்கும் மிடுக்கான ஒரு பாங்கை உருவாக்கியிருப்பதும் நிஜமே.
அது சரி முதன் முதலில் நீங்கள் எந்த தையல்காரரிடம் சட்டை தைத்து போட்டீர்கள் ?
கேட்கத் தோனுச்சு ! அட உங்களுக்கும் சொல்லனும்னு தோனுமே !
- அபுஇபுறாஹிம்