"இறந்து போனவர்களின் நற்செயல்களைப் பற்றியே நினைவுகூருங்கள்" என்ற கருத்துப்பட நபிமொழியொன்று உண்டு. நல்லதுபற்றிப் பேசுவதால், நன்மையின் பக்கம் நாட்டம் உண்டாகின்றது. தீமையைப்பற்றிப் பேசுவதால், சில வேளை தீமையின் பக்கம்கூட நம் கவனம் செல்லக் கூடும். எனவே, நன்மைகளை நினைவுகூர்வதே நமக்கு நன்மை பயக்கும். இவ்வடிப்படையில், எனது வாழ்க்கையில் சந்தித்த நல்லவர்களைப்பற்றி அதிரை வரலாற்றில் பதிவு செய்து வைப்பது நலம் என்ற நோக்கில், மிகச்சிலரைப்பற்றி எனக்குத் தெரிந்த சில தகவல்களை மட்டும் பதிவு செய்ய விழைகின்றேன்.
இத்தொகுப்பைப் படிக்கும் வாசகர்களுக்கு, இவர்களைவிட இன்னும் பலரும் நினைவில் நிழலாடலாம். அவ்வாறு இருந்தால், அவர்களைப்பற்றிக் கட்டாயம் பின்னூட்டம் இடுமாறு அன்புடன் கோருகின்றேன். இதில் இடம் பெறாதவர்கள் கெட்டவர்களா என்ற கேள்வியை எழுப்ப வேண்டாம். நினைவாற்றல் குறைந்த எனது சிற்றறிவில் நிலைத்திருப்பவர்கள் பற்றிய தொகுப்பே இது.
மர்ஹூம் அப்துஸ்ஸலாம் ஹாஜியார் கடல்கரைத் தெரு
நான் இவர்களைச் சந்தித்தபோது, நன்கு பழுத்த பழம் போன்று, வயதான நிலையில் இருந்தார்கள். அப்போதும், உள்ளூரில் நடந்தே வியாபாரம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். இவர்களின் வணிகப் பொருள்கள்: தொப்பி, மிஸ்வாக், அத்தர், சுர்மா போன்றவை. பொருள்களின் அடக்க விலையை முதலில் சொல்லி, இலாபமாகத் தமக்கு நாலணாவைச் சேர்த்துத் தருமாறு வாங்குபவர்களிடம் சொல்லிவிடுவார்கள். இப்பெரியார், நம் தஸ்தகீர் சகோதரர்களின் பாட்டனார் என்பது குறிப்பிடத் தக்கது!
மர்ஹூம் அஹ்மது தம்பி கடல்கரைத் தெரு
இவர்களை, 'தூண்டிமுள் யாவாரி' என்றுதான் மக்கள் அழைப்பர். இவர்களின் சம்பாத்தியம், தூண்டிமுள் விற்பது. அதிரையை ஒட்டிய கடலோரப் பகுதிகளுக்குச் சென்று, அங்கெல்லாம் வாழ்ந்த மீனவச் சமுதாயத்திடம் தூண்டிமுள் விற்பார்கள். இவர்கள் வியாபாரத்திற்காக வெளியூர் செல்லும்போதும், உள்ளூரில் இருக்கும்போதும், எப்பொழுதுமே இஸ்லாமியப் பிரச்சாரம்தான் செய்துகொண்டிருப்பார்கள். ரயிலில் ஏறி அமர்ந்துவிட்டால், அந்தக் 'கம்பார்ட்மென்டில்' இருப்பவர்களோடு மிகத் தோழமையுடன் மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவிடுவார்கள். இதுவன்றி, உள்ளூரிலும் அவ்வப்போது பள்ளிவாசல்களில், யாருடைய அனுமதியையும் எதிர்பார்க்காமல், தமக்குத் தெரிந்தபடி 'பயான்' செய்வார்கள். இவர்களின் அணுகுமுறை, சிலருக்குப் பிடிக்காது. என்றாலும், அத்தகையவர்களிடமும் அன்புடன் நெருங்கிப் பழகுவார்கள். ஊரிலும் வெளியூர்களிலும் தம்மிடம் தம் வணிகப் பையை எப்போதும் வைத்திருப்பார்கள். இவர்கள், 'புஷ்ரா ஹஜ் சர்வீஸ்' உரிமையாளர் அப்துர்ரஸ்ஸாக் ஹாஜியாரின் தாய்மாமாவார்கள்.
இதே தெருவில், 'அபூசாலிஹ்' என்ற இன்னொருவரும் இருந்தார்கள். இவர்களை அத்தெருவாசிகள், 'அபுசாலி மாமா' என்று அன்போடு அழைப்பார்கள். வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு உடையவர்; துணிச்சலானவர். இவர்களைப்பற்றிக் கூடுதலாக எனக்குத் தெரியாது. மொத்தத்தில், நல்ல மனிதர்களுள் இவரும் ஒருவர்.
மர்ஹூம் அப்துஹை சின்ன நெசவுத் தெரு
கடைதெருவில் நாட்டு மருந்துக் கடை நடத்தி, மக்களுக்கு மருத்துவப் பணி செய்த ஆள் இவர்கள் ஒருவர்தான். இவர்களின் உறவினர் ஒருவர் மூலம் நான் கேட்ட செய்தி: இவர்களின் மரணப் படுக்கையின்போது, வீட்டுப் பெண்களைத் தமக்கு 'யாசீன்' ஓதும்படிக் கேட்டார்களாம். அதன்படி, அவர்கள் ஓதி முடித்தபோது, 'போதும்' என்பது போல் கையால் சைகை காட்டி, வானத்தின் பக்கம் ஒரு விரலை உயர்த்தியபின், இவர்களின் உயிர் பிரிந்ததாம்!
மர்ஹூம் மீராசாஹிப் மேலத்தெரு
இவர்களைச் சிறுவர் சிறுமியர், 'மிட்டாய் மீராசா' என்றே அழைப்பர். காரணம், இவர்களின் தோளில் கனத்த பை ஒன்று தொங்கும். அதில் நிறைய மிட்டாய் இருக்கும். அந்த மிட்டாய்களைப் பிள்ளைகளுக்குக் கொடுத்து,"சொல்லுங்கள், லாயிலாஹ இல்லல்லாஹ்!" என்று கூறிக்கொண்டே போவார்கள். இவர்கள் ஓட்டிக்கொண்டு வரும் சைக்கிளில் ஒரு வேட்டைத் துப்பாக்கி தொங்கும். ராணுவ வீரர் போன்ற உடை அணிந்திருப்பார்கள். முன்பு ராணுவத்தில் பணி புரிந்திருக்கக்கூடும். இவர்களின் உறவினர்கள் ஒரத்தநாட்டிலும் இருப்பதாகக் கேள்வி. இவர்கள் மேலத்தெரு ஜின்னா, மலக்கா மஜீத் ஆகியோரின் தந்தை ஆவார்கள்.
மர்ஹூம் அல்ஹாஜ் முஹம்மது அலிய் ஆலிம் (பாகவிய்) நடுத்தெரு
குர்ஆனை முறையாகத் 'தஜ்வீது' சட்டப்படி மனனம் செய்த 'ஹாஃபிஸ்'. இரு அரபிக் கல்லூரிகளில் பயின்று, மார்க்கச் சட்டங்களில் தேர்வு பெற்ற 'ஆலிம்'. அரபிக் கல்லூரியில் பட்டம் பெற்று ஊருக்கு வந்த தொடக்க காலங்களில், புரட்சிகரமாக மார்க்கச் சட்டங்களை மக்களுக்குத் தம் செயல்பாடுகளால் எடுத்துரைத்து, உண்மையை உணர்த்திய அறிஞர். அதற்கு ஓர் உதாரணம்: நாட்டு நடைமுறையில் உள்ள ஐவேளைத் தொழுகைகளுக்குப் பின் ஓதும் கூட்டு துஆ தொழுகையில் உள்ளதன்று என்பதை உணர்த்த, தாம் இமாமாக நின்று தொழவைத்த தொழுகை ஒன்றில் 'சலாம்' கூறித் தொழுகையை முடித்தவுடன் அவர்கள் எழுந்துவிட்டதை நான் கண்டுள்ளேன். ஆண் மக்களை 'அம்போ' என்று விட்டுவிட்டுப் பெண் மக்களுக்கே வீட்டையும் சொத்தையும் கொடுக்கும் ஊர்ப் பழக்கத்தை வன்மையாகச் சாடியவர்கள் இவ்வறிஞர். 'அலி' என்று தமது பெயர் அனர்த்தப்படாமல் இருக்க, உச்சரிப்புச் சுத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக, 'அலி' என்பதை, 'அலிய்' என்று எழுதி மாற்றம் வருத்திய மனிதர் இவர். சில காலம், நமதூர் காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளியில் 'தீனியாத்' ஆசிரியராகப் பணியாற்றிச் சேவை செய்துள்ளார்கள். அதனால், இந்தத் தலைமுறை மாணவர்களுள் பலருக்கு மிகவும் அறிமுகமானவர்கள் இந்த 'அலியாலிம்சா'. கொள்கை விஷயத்தில் அவர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களின் 'வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு' என்ற மறைவற்ற பேச்சு (Frank talk) பலருக்குப் பிடிக்கும். குறிப்பாகத் தம்பி ஜமீலுக்கு. "அலிய் ஆலிம்சா, 'மப்ரூக் கார்கோ' உரிமையாளர் அப்துல் கரீமின் பாசமிகு தந்தையாவார்"
மர்ஹூம் ஷரஃபுத்தீன் ஹாஜியார் தட்டாரத் தெரு
'ஒற்றுமைச் சகோதரர்கள்' என்ற பெயருக்குச் சொந்தமானவர்கள், இவர்களும் இவர்களின் தம்பி (மர்ஹூம்) அப்துல்ஹாதி அவர்களுமாவர். அண்ணனும் தம்பியும், சொல்லி வைத்தாற்போன்று, அடுத்தடுத்துச் சில நாட்களில் இறந்தனர். பணக்காரராக இருந்தும், சிறிதளவும் பெருமையில்லாத அற்புத மனிதர்! கொழும்பில் இருந்த 'ஏ.எஸ்.எம். ஹாஜியார் & சன்ஸ்' என்ற நிறுவனத்தின் உரிமைப் பங்குதாரராக இருந்த இவர்களிடம் பணி புரிந்த ஒருவர் சொன்ன தகவல் ஒன்று: கம்பெனியில் வேலை செய்த பணியாளர்களுள் எவரேனும் தவறு செய்தால், அதை இவர்கள் திருத்தும் பாணியே வேறு. "ஏன் இப்படிச் செய்தாய்?" என்று கேட்கமாட்டார்களாம். "தம்பி இப்படிச் செய்திருக்கலாமே?" என்று கேட்டு, தவறிழைத்தவர் தன் தவற்றை உணரும்படிச் செய்வார்களாம்!
மர்ஹூம் ரஹ்மத்துல்லாஹ் ஹாஜியார் ஆஸ்பத்திரித் தெரு
இவர் காலத்தில் இருந்த ஊர்த் தலைவர்களுள் இவர் குறிப்பிடத் தக்கவர். ஏன்? இவர்களின் வீடு இருக்கும் ஆஸ்பத்திரித் தெரு முனையிலிருந்து நடுத்தெருவின் கடைசியிலிருக்கும் மரைக்கா பள்ளிக்கு நடந்தே வந்து, தம் நண்பர்களுடன் அமர்ந்து, தம் விவேகமான கருத்தாடல்களால், அவர்களைச் செவிமடுக்கச் செய்பவர். சிக்கலான சமூகப் பிரச்சினைகளுக்குத் தமது 'இராஜ தந்திரமான' ஆலோசனைகளைக் கொண்டு தீர்ப்பு வழங்க உதவிய முதிர்ந்த அறிவாளி. மத்தியஸ்தம் செய்வதில் நுணுக்கமானவர். சிரிக்க வைப்பார்; சிந்திக்கவும் வைப்பார்.
மர்ஹூம் அப்துர்ரஹீம் கீழத்தெரு
கடைத்தெருவில் வியாபாரியாக இருந்தாலும், கடமையான தொழுகையை, அதனதன் நேரத்தில், பள்ளிவாசலுக்கு வந்து தொழுதுவந்த நல்ல மனிதர். நம் 'கணினிச் செம்மல்' தம்பி ஜமீலின் பெரிய வாப்பா.
மர்ஹூம் சோமப்பா நடுத்தெரு
'சோமப்பா' என்றவுடன், இன்றுகூட, எங்களுக்கு அவித்த கொண்டைக் கடலைதான் நினைவுக்கு வருகின்றது! 'சேகு முஹம்மது அப்பா' என்ற இயற்பெயர்தான், 'சோமப்பா' எனச் சுருங்கிவிட்டது. அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் மரைக்கா பள்ளியை நோக்கி வந்து, 'பாங்கு' மேடைக்குப் போய், 'சலவாத்' ஓதத் தொடங்கிவிடுவார்கள். பகல் வேளைகளில், வீட்டிலிருந்து கொண்டைக் கடலையை அவித்துக்கொண்டு கிளம்பி, தாம் செல்லும் வழியிலிருக்கும் வீடுகளுக்கும் பிள்ளைகளுக்கும் பகிர்ந்து கொடுத்து, பாசத்தைப் பொழிவார்கள். இவர்களின் சந்ததிகள் (சின்னமச்சி வீடு) வளமாக வாழ்வதற்கு, இப்பெரியாரின் துஆவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
மர்ஹூம் அல்ஹாஜ் அப்துஷ்ஷகூர் ஆலிம் தட்டாரத் தெரு
நாங்கள் பள்ளி-கல்லூரி மாணவர்களாக இருந்த காலங்களில் எங்களுக்கு மார்க்க வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்கள். 'அப்துஷ்ஷுக்கூர் ஹாஜியார்' என்றே பிரபலமான இவ்வறிஞர், தேர்ந்த மார்க்க அறிஞர் (ஆலிம்) என்பது பலருக்குத் தெரியாது! தாய்மொழியான தமிழைத் தவிர, ஆங்கிலம், அரபி, உர்தூ முதலிய மொழிகளிலும் புலமை பெற்றவர். 'தப்லீக்' என்ற தீனுடைய உழைப்பில், உண்மையிலேயே 'உழைத்தவர்' என்று சொல்வதற்கு மிகப் பொருத்தமானவர். உலக நாடுகள் பலவற்றுக்குச் சென்று தீனுடைய உழைப்பைச் செய்தவர். தனிமையில் இவர்களிடம் பேசும் வாய்ப்பு எனக்குப் பல முறை கிட்டியது. அந்நேரங்களில் இவ்வறிஞரின் வழிகாட்டல்கள் எனக்குப் பயனுள்ளவையாக இருந்துள்ளன. பேணுதல், ஈடுபாடு என்பவற்றை இவர்களிடம் நான் நேரில் கண்டுள்ளேன்: கற்றுள்ளேன்.
என் நினைவில் வந்தவர்களைத் தொகுத்தேன். இதில், உண்மையாளராகவும், உழைப்பாளராகவும், எளிமையாளராகவும், உண்மையுரைப்பதில் துணிச்சலானவராகவும், சேவையாளராகவும், அன்பாளராகவும், செழுமையிலும் செம்மையாளராகவும், நுண்ணிய அறிவாளராகவும், வணக்கவாளியாகவும், சிறார்களிடம் அன்பு பாராட்டுபவராகவும், சிறந்த சிந்தனையாளராகவும் இருந்தவர்களைப் பற்றிய சிறு சிறு அறிமுகத் தகவல்களைத் தந்துள்ளேன். நம் வாசகர்கள் தம் பெற்றோர் அல்லது பெரியோர் மூலம் அறிந்த நல்லவர்களைப் பற்றியும் பின்னூட்டம் இடுங்களேன், பார்ப்போம். அத்தகையவர்கள் மறைந்த மாண்பாளர்களாக இருக்கட்டும்.
- அதிரை அஹ்மது
00 91 98 94 98 92 30