நாங்கள் கடல் கடந்து திரவியம் தேடவந்தவர்கள் இங்கே எங்களுக்குத் தடம் கொடுத்தவர்கள் ஒர் ஐக்கிய(மான) அரபு(நாடுகளின்) அமீர(கங்கள்) கண்டெடுத்த நாள் தேசிய ஒருங்கினைப்பு தினம் (national day) இன்று அதுதான் எங்களுக்கும் விடுமுறை நாள்.
விடுமுறை என்றால் உறக்கமே பிரதானமாக இருந்திடும் இங்கிருப்பவர்களின் வாழ்வியலின் பகுதியாக. சரி என்னத்த தூங்கி கண்டுவிடப் போறோம்னு காலை 09:17 மணிக்கு உறைவிடம் விட்டு வெளிக்காற்று வாங்கலாமே என்று பொடி நடை பயில ஆரம்பித்தேன் தலையைக் கவிழ்த்தவனாக. சட்டென்று ஒலித்த வாகனத்தின் சக்கரச் சிக்கலின் சத்தம் கேட்ட திசை நோக்கி பார்த்தால் மஞ்சள் வண்ணம் பூசிய டெயோட்டோ வாடகை கார் (சூரியக் குடும்பத்திற்கு சொந்தமானதல்ல) மந்தையிலிருந்து பிரிந்து வந்த ஆடுபோல் என்னை வெறித்துப் பார்ப்பதுபோல் தோன்றியதால் என் பார்வையை மாற்றி சற்று நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தேன்.

ஏற்கனவே பயணத்திற்கான நுழைவு அட்டை என்னிடம் இருந்ததால் இலகுவாக உள்ளே சென்றேன், அங்கேயும் மீண்டும் மடித்து மேல் நோக்கிச் செல்லும் படிக்கட்டிலே இரயில் வந்து நிற்கும் இடம் சென்றடைந்தேன் அப்போது காலை 09:28 அங்கே குடையிடனோ அல்லது மஞ்சள் பையுடனோ யாரையும் காண முடியவில்லை. பள்ளிக் கூடத்திலிருந்து ஓடிவந்த சிறுவனைப் போல் ஃபிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த இருவர் அரைக்கால் டிரவ்சர் அனிந்து அமைதியா வந்து நின்றார்கள் அதன் பின்னர் சிறுகச் சிறுக பன்னாட்டு முகங்களின் கலவையை அங்கே காண முடிந்தது. சரியாக நான்கு நிமிடம் கழித்து மெட்ரோ இரயில் வந்தது எல்லோருடன் சேர்ந்தே நானும் ஏறிக் கொண்டு தேடினேன், இருக்கை கிடைத்த இடத்தில் அமர்ந்தேன்.
உட்கார்ந்து கல்களை மடக்கி எடுப்பதற்குள் யாரோ சண்டைக்கு நிற்பதுபோல் கொய்யோ முய்யோன்னு சத்தம் வருவதைக் கண்டு திரும்பினால் இரண்டு ஃபிலிப்பைன் நாட்டுக் காரர்கள் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் சாதாரனமாக பேசினாலே சத்தமாகத்தான் பேசுவார்கள் அல்லது அரைக் கரண்டில் ஓடும் டேப்ரிக்கார்டர் மாதிரி இழுத்து இழுத்தும் பேசுவார்கள்.
அடுத்த நிறுத்தம் "யூனியன் ஸ்கொயர்" அங்கே ஏராளமான கூட்டம் ஏறியது, ஏறியவர்கள் கிடைக்கும் இடத்தில் தங்களைப் பொறுத்திக் கொண்டார்கள் சட்டென்று "பின்னே அவட எந்தானு போயி" இப்படி சடேரென்று ஒரு குரலை எழுப்பிக் கொண்டிருந்தவர் பக்கத்தில் இருப்பவர்கள் காது கிழியுமே என்றுகூட விளங்காமல் நாட்டிலிருக்கும் தாரத்திற்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் மொழி தெரிந்தவர்களும் தெரியாதவர்கள் அந்நபரைப் பார்ப்பதும் பார்வையை திருப்புவதுமாக இருந்தனர்.
"காலித் பின் வாலித்" நிறுத்தம் இறங்கியவர்களைத் தொடர்ந்து ஏறியவர்கள் குறைவுதான், அதில் இருவர் பேசிக் கொண்டே உள்ளே வந்தார்கள் "you should not allow them" மற்றவர் "I can't do further" இப்படியாக அவர்களின் பிரச்சினையை பேசி கொண்டிருந்த ஒருவருக்கு அலைபேசி ஒலித்தது அதனை எடுத்து அவரது மொழியில் பேசினார் என்ன பேசினார்னு தெரியலை, என்னோட யூகம் அது இந்திய மொழிகளில் ஒன்று அதுவும் வடநாட்டைச் சேர்ந்ததுன்னு விளங்கிக் கொண்டேன்.
அடுத்த நிறுத்தம் "அல்-கராமா" இங்கேதாங்க நம்ம மின்சார இரயிலில் ஏறுமே கூட்டம் அந்த மாதிரி திபு திபுன்னு ஏறினாய்ங்க, ஆஹா.. சய்த்தம்ம் "கொய்யோ முய்யோ", "கைகளியே", "கியாகர்னக்கல்யே", "கோமஸ்தகா", "ஆ எத்தியா" அதனூடே "அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற முகமுன்னும், இப்படியாக காதில் விழுந்த மொழிகளின் சிலது தெரிந்திருந்தாலும் மற்றவைகள் எனக்குத் தெரியவில்லையே, இங்கே உங்களுக்கு சொலித்தர ஆனா ஆராவரம் தொடர்ந்து கொண்டிருந்தது.
நிறுத்தம் "அல்-ஜாஃப்லியா" யாருமே ஏறவில்லை இறங்கவும் இல்லை என் கண்ணுக்கு பட்டவகையில்.
அடுத்தடுத்து வந்த நிறுத்தங்களில் "துபாய் டிரேட் செண்டர்" மற்றும் "ஃபினான்ஸியல் செண்டர்" ஓரிருவர் ஏறி இறங்கினர் ஆனா தொடரும் மொழிச் சத்தங்கள் அப்படியே அதில் ஏற்றம் இறக்கம் இருந்து கொண்டேயிருக்கிறது.
அடுத்த நிறுத்தம் "புர்ஜ் கலிஃபா" இங்கே கொஞ்சம் கொய்யோ முய்யோ கூட்டமும் மற்றவர்களும் இறங்கினார்கள் சற்று மொழிகளின் ஓசைச் சண்டைகள் குறைவானது போல் உணர்வு ஏற்பட்டது.
அதற்கு அடுத்தடுத்து வந்த நிறுத்தங்களிலும் "பிஸினஸ் பே", "இஸ்லாமிக் பேங்க்", "ஃபர்ஸ்ட் கல்ஃப் பேங்க்" ஏற்றமும் இறக்கமும் இருந்தது ஆனால் சற்று மொழிகள் வதைகள் குறைந்திருந்தது என்னவோ மெய்யே.
நிறுத்தம் "தி மால் ஆஃப் எமிரேட்ஸ்" அப்படியே பாதி இரயில் காலியான மாதிரி தோன்றிய சில விணாடிகளில் அதற்கும் சற்று குறைவாக மற்றொரு கூட்டம் ஏறியது இதில் நிறைய ஐரோப்பிய வெளிநாட்டினர்தான் அதிகம். நாம மட்டும் என்னவான்னு கேட்டுடக் கூடாது அதுக்காக எங்களை இங்கே மண்ணின் மைந்தர்கள் என்றும் நினைத்துட வேண்டாம். மொழிக் கூச்சல் குறைவாக இருந்தாலும் பாதி புரிகிறது மீதி புரியாமல் இருந்தது அவர்களுக்கு அப்படித்தான் போலும்னு சும்மாவே இருந்திட்டேன்.
இப்படி அமைதியாக இருந்திக்கும் போதுதான் வேறு பெட்டியில் ஏறியவர்கள் இடம் தேடி அலைந்த பெண்களும் ஆண்களும் வட நாட்டினர் (அங்கே அரசியில் நடத்துறவங்களா இருக்கலாம்) சுற்றுலாவுக்கு வந்தவர்கள் போலிருந்தனர். என்ன விஷயம்னா அவர்கள் ஒவ்வொரு வரையும் நாம்தான் சுற்றி சுற்றிப் பார்க்கனும் அவ்வளவு உருண்டையாக இருந்தார்கள் இந்த உடல்வாகோடு சுற்றிப் பார்க்க வந்திருக்கிறார்கள் வந்தவர்கள் அப்படியே அந்த இடத்திலேயே நின்று விட்டார்கள், சற்று அமைதி காத்த இடம் மீண்டும் இந்திய இரயில் பயணங்களை நினைவுக்கு கொண்டு வந்தார்கள். திராவிடக் கட்சிக்காரர் இருந்திருந்தால் நிச்சயம் தார்பூசியிருப்பார் இங்கே இந்தி ஒழிக என்று அதோடு நோட்டீஸும் ஒட்டியிருப்பர் இந்த மெட்ரோவில் !
வட நாட்டு மொழி வதை(ச்சத்தம்) குறந்தபாடில்லை அதற்கு அடுத்தடுது வந்த நிறுத்தங்கள் சிலரின் ஏற்றம் இறக்கம் இருந்தாலும் அவர்கள் அமைதியாக எதோ தொலைத்தவர்கள் போல்தான் வந்தார்கள் சென்றார்கள்.
இறுதியாக இறங்க வேண்டிய இடம் "இப்னு பத்துத்தா மால்" நிறுத்தம் வந்து இரயில் நின்றதும் புயல் அடித்து ஓய்ந்த அமைதியானது இரயில் ஆனல் குளிர்சாதங்களின் இரைச்சல் மட்டும் தூறலின் இனிய சத்தத்தை ஞாபகப்படுத்தியது.
இந்த 50 நிமிடப் மெட்ரோ பயணத்தில் தமிழ் பேசுபவரோ என்று எண்ணத் தோன்றிய முகங்களை காண முடிந்ததே தவிர ஆனால் ஒரு வார்த்தை தமிழில் என் காதுகளில் விழவில்லை ஆச்சர்யமாக இருந்தது, ஒருவேளை எனக்கு தமிழ் தெரியும்னு தெரிந்துதான் அமைதியாக இருந்தா(ய்)ங்களோ என்னவோ.. வேற என்னவென்று தெரியலைங்க !.
இந்த மெட்ரோ இரயில் பயணங்கள் பற்றி எழுத நிறைய இருக்குங்க என்ன ஒரு சிக்கல்னா அத எல்லாத்தையும் தமிழிலதான் வாசிக்க வேண்டும் அதுதான் நம் நிலமை J.
ஒரேயொரு விஷயம் கேட்கனும்னு தோனுச்சு அதைக் கேட்டு விடுகிறேனே : அதெப்படிங்க இந்த ஏழு குட்டி குட்டி நாடுகளே (ஐக்கிய அரபு அமீரகம்) எவ்ளோ ஒத்துமையாக இருக்காங்க ஒன்னாவே எல்லாமே செய்றாங்க, ஒரே பெருநாள் கொண்டாடுறாங்க ஆனா நாம நாலு தெருப் பெயராலே பிரித்து பிரித்து வைத்து இருக்கோம் ? ஏனுங்க எப்போதான் ஒன்னா சேர்ந்தே எல்லாமே செய்யப் போறோம். சரி சரி நாங்க ஒன்னாதானே இருக்கோம்னு என்னோட காதை திருவ வேண்டாம், கொஞ்சம் முன்னாடி வாங்க அத கைகோர்த்து முன்னிருத்தி காட்டுவோமே!
-- அபுஇபுறாஹிம்