Apr 25, 2011

செக்கடிக்குள கரையினிலே.........

குளிர்ந்த காற்று குளத்தை முத்தமிட்டுச்செல்லும்

மரங்கள் அதை தட்டிக்கொடுத்து மகிழும்

உண்டியலில் விழும் சில்லரை காசுபோல்

மீன்கொத்தி குள‌த்தில் விழுந்து தன் அலகால் மீனைக்கவ்வும்

மீன் பிடித்து ஓய்ந்து போன‌ ப‌ற‌வைக‌ள் ம‌ர‌த்தில் ஓய்வெடுக்கும்

பெரியவர், சிறியவர் பாகுபாடின்றி திண்ணை வரவேற்கும்

சாய்ங்கால‌க்காற்று திண்ணையில் சாய்வோருக்கு சாம‌ர‌ம் வீசும்

வெண் சோப்பு நுரை கரையேற அலையில் துடிக்கும்

ஊருக்கு வரும் வரியவர்க்கு கோடைவாச‌ஸ்தலமாய் மாறும்

எவ்வித மருந்தின்றி அங்கு உற‌க்க‌ம் தானாய் தேனாய் வரும்.

இரவில் வெண் நிலா இற‌ங்கி வ‌ந்து குள‌த்தில் நீந்தும்

காண்போரின் உள்ள‌மோ க‌ண்கொள்ளாக்காட்சியில் மிளிரும்

சிறு பாம்புகள் நெளிந்து சென்று நீச்ச‌ல் ப‌ழ‌கும்

ஆமைக‌ள் அவ்வ‌ப்பொழுது நீர் மேல் வந்து

வருகைப்பதிவேடு ஏதுமின்றி வ‌ண‌க்க‌ம் ஐயா சொல்லிச்செல்லும்

குளிப்ப‌வ‌ரை சிறு மீன்க‌ள் கிள்ளிச்செல்லும்

த‌வ‌ளைக‌ள் த‌ன் வாயால் யாருக்கோ கூப்பாடு போடும்

தாம‌ரை இலை த‌ன்மேல் ப‌டுத்துற‌ங்கும் த‌ண்ணீரை தாலாட்டும்

ம‌ழை நீரால் குள‌ம் நிர‌ம்பும் ம‌கிழ்ச்சியில் ம‌ன‌ம் நிர‌ம்பும்

துவைக்க‌ப்ப‌டும் துணியால் குள‌க்க‌ரை ந‌ன்கு அடிவாங்கும்

அத‌ன் ச‌ப்த‌ம் குள‌ம் சுற்றும் கேட்கும்

வானில் ப‌ட‌ர்ந்து சூரிய‌னுக்கு விடுமுறைய‌ளிக்கும்

சிறார்க‌ளின் க‌ல் சிறு அலையை சிறுவட்டமாய்‌ உண்டாக்கும்

யார் வீட்டு அன்ன‌மோ குள‌த்தில் அது எண்ண‌ம் போல் நீந்தும்

இவை மூலம் இய‌ற்கை இராப்பகலாய் கொஞ்சி விளையாடும்

எல்லாவ‌ற்றையும் இறையில்ல‌ம் (செக்கடிப்ப‌ள்ளி) மேலிருந்து நன்கு க‌ண்காணிக்கும்.

ஊரில் ந‌ல்ல‌ ம‌ழை எங்கோ ந‌ம் உள்ள‌த்தில் குளிர்

காற்றால் ம‌ர‌ம் அங்கு சாய்ந்த‌து உள்ள‌மோ இங்கு உருண்ட‌து

நீரில் அங்கு மீன் துள்ளிய‌து இங்கு நினைப்பால் உள்ள‌ம் துள்ளிய‌து

அங்கோ உண்மையில் ம‌ழைத்தூரல் இங்கோ உள்ளத்தில் ம‌ழைச்சார‌ல்


அதிரையில் உள்ள குள‌த்தாங்க‌ரைகளின் குளிர்காற்று அர‌பிக்க‌ட‌ல் ஓர‌ம் ஒதுங்கிய‌ ந‌ம‌க்கும் அவ்வ‌ப்பொழுது வீச‌த்தான் செய்கிறது நினைவில்.  அவ்வப்பொழுது நிஜ‌த்தில் விடுமுறையில்.(அது க‌லிபோர்னியாவ‌ரை செல்லுமா என்ப‌து தெரிய‌வில்லை? அங்கு மையமிட்டிருக்கும் மகுடமே (க்ரவ்ன்) பதில் சொல்லட்டும்)

(நீங்கள் அனனவரும் குளித்துக் கொண்டாடிய குளங்களை தலைப்பில் இட்டு நீங்கள் எழுதி/நினைத்து மகிழலாம் எமக்கு ராய‌ல்ட்டி ஒன்றும் தேவையில்லை இஞ்சிடீயே போதுமான‌து ச‌கோ. த‌ஸ்த‌கீர் இய‌ம்பிய‌து போல்)

இய‌ற்கையை அழ‌காய் உருவாக்கி அதை செவ்வ‌னே ஆட்சி செய்து வரும் இறைவ‌னுக்கே எல்லாப்புக‌ழும் என்று இறுதியில் போற்றிப்புக‌ழ்ந்த‌வ‌னாக‌.


-- மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More